Download PDFDownload eBook (ePub)
வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இன்றைய நாட்களில் பல போதகர்கள் தங்களால் எல்லா நோய்களையும் குணப்படுத்தமுடியும், இறந்தவர்களை எழுப்ப முடியும் என்று சொல்கிறார்கள். இந்த சிறிய புத்தகத்தில், இயேசுவின் பெயரில் நிகழ்த்தப்படும் அடையாளங்கள் மற்றும் அற்புதங்கள் குறித்து பரிசுத்த வேதாகமம் நமக்கு என்ன சொல்லித் தருகிறது என்பதை பார்க்க விரும்புகிறோம்.
எச்சரிக்கை!
அற்புதங்களை பற்றிய பெரிய வாக்குறுதிகள், குணமடைந்தவர்களின் சாட்சியங்கள், அல்லது தனிப்பட்ட முறையில் கண்ட அற்புதங்களால் ஈர்க்க படுவதற்கு முன்பு, இது சம்பந்தமாக வேதத்தில் உள்ள அனைத்து எச்சரிக்கைகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.
உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக… (உபாகமம் 13:1–5)
அதிசயமான அற்புதங்களை செய்தாலும், அந்த நபரின் போதனைகளை நாம் ஆராய வேண்டும். இப்போதெல்லாம், எந்த ஒரு பிரசங்கியும், “… வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள்…” என்று கூற மாட்டார்கள், ஆனால் அவர்கள் இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளுக்கு மாறாக கற்பித்தால், அவர்களை “கர்த்தருடைய வழியில் இருந்து நம்மைத் திருப்ப முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்களாக பார்க்க வேண்டும்.
கத்தோலிக்க ஆலயங்களில் (எ.கா., வேளாங்கண்ணி, பாத்திமா, லூர்து, முதலியன) “அன்னை மரியாள்” மூலம் நடக்கும் குணமளிக்கும் அற்புதங்கள் வேதாகமத்திற்கு எதிரானது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. அதேபோன்று புராட்டஸ்டன்ட்/ பெந்தேகோஸ்தே பிரசங்கிகள் மற்றும் குணப்படுத்துபவர்களின் வார்த்தைகளையும் போதனைகளையும் நாம் ஆராய வேண்டும். தேவனுடைய வார்த்தைகளும், போதனைகளும் அதிசயமான அடையாளங்களை விட கடவுளுக்கு முன்பாக மிகவும் முக்கியமானது என்று உபாகமம் 13: 1–5 தெளிவாக சொல்கிறது.
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்… […] “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் ‘கர்த்தாவே! கர்த்தாவே!’ என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: ‘கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள். அப்பொழுது, ‘நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லுவேன்”. (மத்தேயு 7:15–16; 21–23)
வசனம் 22 ல், இயேசு கடைசி நியாய தீர்ப்பை பற்றி பேசுகிறார். அவரிடம் “ஆண்டவரே, ஆண்டவரே…” என்று சொல்லி இயேசுவின் பெயரில் பல அற்புதங்களைச் செய்த தீர்க்கதரிசிகளையும் பிரசிங்கிகளையும் “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை” என்று இயேசு சொல்வதால் அவர்கள் பரலோகத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் கடவுளின் சித்தத்தைச் செய்யவில்லை.
மீண்டும் ஒரு தெளிவான எச்சரிக்கை:
இயேசுவின் பெயரில் அற்புதங்கள் செய்தோம் என்று அவர்கள் உறுதியாக சொன்னாலும், அவர்கள் உண்மையானவர்களா என்று அறிந்து கொள்ள அவர்களுடைய வாழ்வின் கனிகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வாழ்வின் கனிகள் என்பது அற்புதங்களைக் குறிக்க முடியாது, ஏனெனில் அவர்கள் செய்த அற்புத அடையாளங்கள் இயேசுவால் கண்டனம் செய்யப்படுகின்றன (மத்தேயு 7: 21–23). வாழ்வின் கனிகள் அவர்களின் வாழ்க்கையையும் போதனையையும் குறிக்கிறது. பிரபலமான குணப்படுத்துபவர்கள் மற்றும் பிரசங்கிகள் மிகுந்த ஆடம்பரத்தில் வாழ்கிறார்கள் (1 யோவான் 3:17), பணத்தை விரும்புகிறார்கள் (1 தீமோத்தேயு 6:6–10), மக்களின் மரியாதையை விரும்புகிறார்கள் (யோவான் 5:44, மாற்கு 12:38- 40), உலகை நேசிக்கிறார்கள் (1 யோவான் 2:15–17), மற்றும் மிகவும் பரபரப்பாக வாழ்கிறார்கள். எனவே தனிப்பட்ட முறையில் அவர்களை அறிந்து கொள்ள முடிவதில்லை (1 தெசலோனிக்கேயர் 2:4–12). இருப்பினும், சில நேரங்களில் அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல; எனவே, அவர்களின் போதனைகளை நாம் வேதத்தின் அடிப்படையில் ஆராய வேண்டும்.
அந்தப் (பெரோயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். அப்போஸ்தலர் 17:11
பவுலின் போதனைகள் உண்மையா என்பதை ஆராய்ந்ததால் பெரோயா பட்டணத்தை சேர்த்தவர்கள் நற்குணம் உள்ளவர்களாய் இருந்தார்கள். நாம் ஒருவரை நம்புவதற்கும் பின்பற்றுவதற்கும் முன் அதையே செய்ய வேண்டும். எ.கா. எவரேனும் “இயேசு உலகத்தின் மீட்பர் மற்றும் அவர் கடவுள்” என்று கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. ஆனால், அவர்களின் அனைத்து போதனைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். (அப்போஸ்தலர் 20:26–27)
பவுல் எபேசியர்களுக்கு தேவனுடைய சித்தம் முழுவதையும் அறிவிக்காமல் இருந்திருந்தால், அவர் அவர்களுடைய இரத்தத்தின் மீது குற்றவாளியாக இருந்து, நித்திய ஜீவ வழியைக் காட்டியிருக்க மாட்டார்.
ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். (மத்தேயு 24:24–25)
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். (2 தெசலோனிக்கேயர் 2:9–10)
கடைசி வசனம், ஏமாற்றுபவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பியவர்களின் பொறுப்பையும் தவறையும் காட்டுகிறது. பொய்யான தீர்க்கதரிசிகளால் ஏமாற்ற பட்டோம் என்று அவர்கள் மேல் பழி சொல்ல முடியாது. ஏமாற்றுகிறவர்களுக்கு தண்டனை நிச்சயமாக கடுமையாய் இருக்கும். ஆனால், கடவுள் அனைவருக்கும் நன்மை தீமையை அறியும் திறனை கொடுத்துள்ளார். நம்மிடம் வேதாகமம் உள்ளது. நாம் திறந்த மனம் கொண்டு சத்தியத்தை நேசித்தால் அது நம்மை வழிநடத்தும். எனவே, வேதாகமத்தை அறிந்திருப்பதும் அதை பற்றி கொண்டு உறுதியாய் இருப்பதும் நம்மை கள்ளப்போதகர்களிடம் இருந்து பாதுகாக்கும்.
எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:21–22)
இயேசு நோய்களை எப்படி குணப்படுத்தினார்?
இயேசுவின் அற்புதங்களில், கடவுளின் கிரியையை நாம் தெளிவாக காண்கிறோம். இயேசுவின் குணமளிக்கும் அற்புதம் முழுமையானது மற்றும் சந்தேகத்திற்கு இடம் இல்லாதது. பின்வரும் பகுதிகளில் இயேசுவின் அற்புதங்களின் தெளிவான தன்மையை நாம் காணலாம்:
இயேசு அனைவரையும் குணமாக்கினார்
அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார் (மத்தேயு 8:16)
இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி… (மத்தேயு 12:15)
…..அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள். (மாற்கு 6:53–56)
மேல் சொன்ன வசனங்களில் இருந்து, இயேசு ஒரு சிலரை மட்டுமல்ல, எல்லா நோயாளிகளையும் குணப்படுத்தினார். குணமாகும் என்ற நம்பிக்கையுடன் யார் சென்றாலும், என்ன நோய் இருந்தாலும், இயேசுவால் குணமடைந்தார்கள். இப்போதெல்லாம் குணப்படுத்தும் கூட்டங்களில், நோயாளிகள் நிறைய நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கூட்டங்களுக்கு வருவதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் அவர்கள் வந்த அதே நிலையில் திரும்பி செல்கிறார்கள். இதற்கு “குணப்படுத்துபவர்கள்” பொதுவாகக் கொடுக்கும் காரணம் நோயாளியின் அவிவிசுவாசம். ஆனால் இயேசு குணமடைந்த பின்பு தங்களுக்கு ஆழமான விசுவாசம் இல்லை என்று காண்பித்தவர்களையும் குணப்படுத்தினார்:
பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்து போனார். அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். (லூக்கா 17:11–19)
பத்து குஷ்டரோகிகளும் குணமடைந்தனர்; இருப்பினும், இயேசுவுக்கு நன்றி சொல்ல வந்தவரின் விசுவாசத்தை மட்டுமே இயேசு ஏற்றுக்கொள்கிறார். அவர் தாம் குணப்படுத்தியவர்களிடம் இருந்து விசேஷ விசுவாசத்தை எதிர்பார்க்கவில்லை. இயேசு அவர்களை குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையும், விருப்பமும் இருந்தால் போதும்.
இயேசு ஒருவரை குணப்படுத்த முயற்சி செய்து, அவர்களுக்கு போதுமான விசுவாசம் இல்லாததால் குணப்படுத்த முடியவில்லை என்று வேதத்தில் பார்ப்பதில்லை. முதலில் ஒருவருக்கு நம்பிக்கை அளித்து, பிறகு அவர்களைக் குணப்படுத்தத் தவறியதையும் நாம் பார்ப்பதில்லை.
சில நேரங்களில், இன்றைய பிரசங்கிகள் குணப்படுத்த முடியாவிட்டால், இது கடவுளின் சித்தம் அல்ல என்று விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால் குணப்படுத்துவது கடவுளின் விருப்பமாக இல்லாவிட்டால், முதலில் ஒருவரை குணப்படுத்த முயற்சிப்பதே சரியாக இருக்காது. அவர்கள் கடவுளால் வழி நடத்தப்படவில்லை என்பதை இது காட்டவில்லையா? இயேசுவும், பின்னர் அப்போஸ்தலர்களும் (பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு) இது போன்ற தோல்வியான முயற்சிகளை செய்தார்கள் என்பதை காண முடியாது.
“குணப்படுத்துபவர்கள்” நாசரேத்தில் இயேசு அற்புதங்கள் செய்யாததை குறிப்பிட்டு தங்களை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்….
இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. (மத்தேயு 13:53–58)
நாசரேத்தினர் அவிவிசுவாசம் உள்ளவர்களாக இருந்தார்கள். “அவர்கள் இயேசுவை குற்ற படுத்தினார்கள்.” அவிவிசுவாசம் என்பது அவர்களுடைய சந்தேக மனப்பான்மையைக் குறிக்கிறது. இதனால் இயேசுவால் அவர்களுக்கு உதவ வாய்ப்பில்லாமல் போயிற்று. அவர்களுடைய மனப்பான்மையைக் கண்டு இயேசு அவர்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்ய விரும்பவில்லை. இது, இன்று தோல்வியான குணமளிக்கும் முறையிலிருந்து முற்றிலும் வேறு படடது.
இயேசு முழுமையாக, கண்கூடாக குணப்படுத்தினார்
சுவிசேஷத்தில் இயேசு குணப்படுத்திய நோய்கள் மிகவும் கொடிய நோய்களாலான பக்கவாதம், பிறவிக் குருடு, ஊமை, தொழுநோய், இரத்தப்போக்கு (12 ஆண்டுகள்), பக்கவாதம் (38 ஆண்டுகள்) , முதலியன.. சுவிஷேஷத்தில், மூன்று முறை, இயேசு மரித்தவர்களை எழுப்பினார். இயேசு தன்னுடைய அற்புத காரியங்களால் ஜனங்களை ஏமாற்றுகிறார் என்று அவருடைய எதிரிகளால் கூட நிரூபிக்க கடினமாக இருந்தது. ஏனென்றால் அவருடைய அற்புதம் மிகவும் தெளிவாக இருந்தது. யாராலும் மறுக்க முடியவில்லை. உதாரணமாக, இறந்து 4 நாட்கள் ஆன இலாசரை உயிரோடு எழுப்பிய போது, யூதத்தலைவர்கள் இயேசுவுக்கு எதிராக என்ன செய்வது என்று மிகவும் யோசித்தார்கள் என்பதை மிகத் தெளிவாக பார்க்கலாம்:
இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள். அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். (யோவான் 11:43–48; 53)
அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். (யோவான் 12:9–11)
மற்றொரு சூழ்நிலையில், குருடனாகப் பிறந்த மனிதனை இயேசு குணப்படுத்திய போது, பரிசேயர்கள் அந்த அற்புதத்தை பொய்யாக்க முயன்றனர். ஆனால் அதில் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. (யோவான் 9:17–20)
பரிசுத்த ஆவியைப் பெற்ற பிறகு, பேதுருவும் யோவானும் ஒரு முடவனை குணமாக்கினார்கள் என்று வாசிக்கிறோம் (அப்போஸ்தலர் 3:1–11). அந்த முடவன் சுகமானது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது. அப்போஸ்தலர் 4:1–22 ல், யூத மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களின் பிரசங்கத்தின் காரணமாக அவர்களைக் கேள்வி கேட்கவும் தண்டிக்கவும் முயன்றனர். ஆனால் அவர்கள் கூட முடவன் சுகமானதற்கு எதிராக எந்த வார்த்தையும் இல்லாமல் இருந்தனர் (அப் 4:21–22).
மேலே சொன்னபடி, இயேசுவும் அப்போஸ்தலர்களும் குணப்படுத்தியது மிகவும் கொடிய நோய்கள். நோய் குணமடைந்தது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தன. ஆனால் இப்பொழுது நடக்கும் அற்புதங்களில் நோய்களிலிருந்து குணமாவது அனைவருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை (எ.கா. உள் வலி, கட்டி, தலைவலி, கால் வலி). சில சமயங்களில் இது முன்பே ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அல்லது பின்னர் போலியானது என நிரூபிக்க பட்டதாகவும் இருக்கிறது. மேலும், அதன் பிறகு எவ்வளவு நேரம் வலி இருக்காது என்பது பெரும்பாலும் நமக்குத் தெரியாது.
அற்புதங்களை குறித்து இயேசு என்ன சொன்னார்?
மக்களின் வாழ்க்கையைப் துன்பப்படுத்தும் மிக மோசமான “நோய்” பாவம் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்களை பாவத்திலிருந்து மனந்திரும்பும்படி அழைப்பதும், பரலோகத்திற்கு செல்லும் வழியைக் காட்டுவதும் அவருடைய நோக்கமாக இருந்தது. கடவுளுடனான உறவை சரிப்படுத்தவும், இதயத்தின் காயங்களை குணப்படுத்தவும் விரும்பினார்.
…..அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத்தேயு 1:20–21)
யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். (மாற்கு 1:14–15)
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம் பண்ணவேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டு வந்தேன் என்று சொல்லி; கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். (மாற்கு 1:35–39)
தன்னைத்தான் வெறுத்து, பாவத்திற்கு மரித்து அவரை பின்பற்ற இயேசு அழைத்தார். இந்த மாற்றத்தை பரிசுத்த ஆவியானவர் மூலம் பெறுகிறோம் (எபேசியர் 4:22–24). இதுவே இயேசு தந்த சுகப்படுத்துதல். மக்களின் உடல் நோய்கள் குணமானாலும், பசி திருப்தியடைந்தாலும், அவரை பின்பற்ற தயாராக இருந்தால் மட்டுமே ரட்சிப்பை பெற முடியும் என்பதை அறிந்திருந்தார். அவர் செய்த அற்புதங்களின் நோக்கம்: (1) அவரே கடவுள் அனுப்பிய உலகத்தின் மீட்பர் என்பதை காண்பிக்க (2) துன்பம் இல்லாத சொர்க்கத்தை குறித்து வெளிப்படுத்த (வெளிப்படுத்துதல் 21:4). அவரது அற்புதங்களால் ஈர்க்கப்பட்டு, அவரின் உண்மையான செய்தியை புரிந்து கொள்ளாமல் பின்பற்றுபவர்களை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட விசுவாசம் மேலோட்டமானதும், கொஞ்ச காலமே நிலைக்கும் என்பது அவருக்கு தெரியும்:
பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடையநாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்கு சாட்சி கொடுக்க வேண்டியதா இருக்கவில்லை. (யோவான் 2:23–25)
யோவான் 6 இல் இதை தெளிவாக பார்க்கலாம்;
அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்….இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். (யோவான் 6:24–35)
தம்மிடம் இருந்து உணவை பெற்று கொண்டதினாலே மக்கள் அவரை பின்பற்றுவதை அறிந்தார். எனவே, இயேசு அவர்களின் கவனத்தை வாழ்வளிக்கும் உணவின் மீது செலுத்தினார். இதனால் அவரை பின்பற்றிய நிறைய சீடர்கள் அவரை விட்டு விலகிப் போயினர்:
……அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். (யோவான் 6:57–58; 59–63; 66)
அவரை பின்வற்றுவதின் விலை அறிந்த பின்பு நிறைய சீடர்கள் அவரை விட்டு விலகினர். ஆனாலும் இயேசு அவரை பின்பற்றுவதை குறித்து தெளிவாக சொன்னார். இதனால் அவர்களை இழப்பதற்கும் இயேசு பயப்படவில்லை.
வேதத்தில் அற்புதங்கள்
வேதத்தில் பார்த்தால் அடையாளங்களும் அற்புதங்களும் எப்போதும் நடக்கவில்லை. குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டுமே நடந்தன. கடவுள் ஒரு சில விசேஷ காலங்களில் இப்படி செயல்பட்டார். குறிப்பாக, மோசே, எலியா, எலிசா, இயேசு, மற்றும் அப்போஸ்தலர்களின் காலத்தில் நாம் காணலாம். வேதத்தில் இந்த காலங்கள் முக்கியமானவைகள். மோசேயின் காலம் இஸ்ராயேல் ஒரு தேசமாக ஆரம்பமானது மற்றும் பழைய உடன்படிக்கை தொடங்கிய காலம்.
மோசேயின் காலத்தில், பத்து வாதைகளும் செங்கடலைக் கடப்பதும் இஸ்ரவேலர்களுக்கு மிகவும் விசேஷமான அனுபவங்களாக இருந்தன.
இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள். கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள். (யாத்திராகமம் 14:30–31)
எலியா மற்றும் எலிசாவின் காலத்தில் இஸ்ரவேலின் ஆவிக்குரிய நிலைமை பலவீனமாக இருந்ததால் தேவன் அற்புத அடையாளங்களால் அவர்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்தினார்.
இயேசுவும் அப்போஸ்தலர்களும் புதிய இஸ்ரேல் மற்றும் புதிய உடன்படிக்கையின் அடித்தளமாய் இருந்தனர். இந்த விசேஷ காலங்களில், அதிசயமான அடையாளங்கள் மூலம் கடவுள் மக்கள் தம்மை நம்புவதற்கு உதவ விரும்பினார்.
இருப்பினும், கடவுள் அவர்கள் மத்தியில் இந்த அதிசயமான வழியில் தொடர்ந்து செயல்படவில்லை. இந்த மகத்தான நிகழ்வுகளை அவர்கள் நினைவில் வைத்து, தலைமுறை தலைமுறையாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.
ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: …..உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் ஜாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். (உபாகமம் 4: 9&10)
பெரிய அற்புதங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறவில்லை. கடவுள் வார்த்தையின் சாட்சியங்களின் அடிப்படையில் விசுவாசத்தை எதிர்பார்த்தார். இதே போல், புதிய ஏற்பாட்டில் இயேசுவும் அப்போஸ்தலர்களும் செய்த அற்புதங்கள் அனைத்து பிற்கால தலைமுறையினருக்கும் எழுதப்பட்டுள்ளன. இதனால் நாமும் அவற்றைப் படிக்கலாம், நம் சொந்தக் கண்களால் பார்க்க முடியாவிட்டாலும் நம்பலாம். யோவான் தனது நற்செய்தியின் முடிவில் அதை வெளிப்படுத்துகிறார்:
இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. (யோவான் 20:30–31)
யோவானின் இந்தக் கருத்துக்கு முன்பு, தோமா உயிர்த்தெழுந்த இயேசுவை தன் கண்களால் பார்க்காமல் நம்ப தயாராக இல்லாததால், இயேசு அவரைக் கண்டித்த சம்பவம் ஒன்று உள்ளது:
இயேசு கூறினார்:
…….அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20:24–29)
தாமஸ் கண்மூடித்தனமாக நம்புவதை இயேசு விரும்பவில்லை என்றாலும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நம்புவதற்கு போதுமான ஆதாரம் இருந்தது. அது என்னவென்றால் மற்றவர்களின் சாட்சி! இன்று நமக்கும் இது பொருந்தும், பரிசுத்த வேதாகமத்தில் கடவுளின் அற்புதச் செயல்கள் பற்றிய விவரம் அவரை நம்புவதற்கு போதுமானது. அதிக அடையாளங்களுக்கு அவசியமில்லை!
கிறிஸ்தவனாக வாழ்வதற்கான அறிகுறிகள்
மேலே சொன்னபடி, இப்போதெல்லாம் சில மக்கள் போதகர்கள் அற்புதம் செய்தால் தேவனிடத்திலிருந்து வந்தார்கள் என்று நம்புகிறார்கள். இருப்பினும், நாம் பார்த்தபடி, அற்புதங்களை தெய்வீக அதிகாரத்திற்க்காகவும் மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும் தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே, இதுபோன்ற விஷயங்களை கேட்டால் அல்லது பார்த்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தேவனுடைய உண்மையான மக்கள் யார் என்று தெரிந்து கொள்ள இயேசு நமக்கு அற்புதங்களை தவிர வேறு அடையாளங்களை சொல்கிறார்…
நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோவான் 13:34–35
சகோதர அன்பை நடித்து காண்பிக்க முடியாது. இயேசுவின் அன்பு போல் ஒருவரையொருவர் அன்பு செய்வதற்கு, கடவுளிடம் அர்ப்பணிப்பும், சக விசுவாசிகளின் ஆன்மீக வாழ்வில் ஆழ்ந்த அக்கறையும் தேவை. முதல் கிறிஸ்தவர்களைப் போல் உண்மையான கிறிஸ்தவர்களும் சகோதர ஒற்றுமையிலும், ஒருவருக்கொருவர் தங்கள் உயிரைக் கொடுத்தும் வாழ்கிறார்கள். பெரிய அற்புதங்கள் நடப்பதாகக் கூறப்படும் “தேவாலயங்கள்” நிறைய உள்ளன. ஆனால் அங்கே சகோதர அன்பு இல்லை. உதாரணமாக, பணக்காரர்கள் ஏழைகளுக்கு முறையான மருத்துவ உதவியும், ஆரோக்கியமான நிலையில் வாழ உதவியும் செய்தால், ஒருவேளை பல நோய்களைத் தவிர்க்கலாம். மேலும், கிறிஸ்தவர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட சகோதரர்களை அன்பு, அக்கறை, ஆறுதல், மற்றும் ஆவிக்குரிய ஊக்கத்துடனும் கவனித்தால், அவர்கள் பொறுமையுடனும் நன்றியுடனும் தங்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள அதிக வலிமையைப் பெறலாம்.
மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன். அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான். அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன். ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான். (பிலிப்பியர் 2: 25–30)
பவுல் எப்பாப்பிரோதீத்துவை அற்புதமாக குணப்படுத்தவில்லை. பொதுவாக அப்போஸ்தலர்களும் கிறிஸ்தவர்களும் குணமளிக்கும் வரங்களையும், அற்புத அடையாளங்களையும் பயன்படுத்துவதில் கடவுளின் விருப்பத்தை பார்த்தனர். நோயாளிகளுக்கான ஜெபமும் அன்பான ஆதரவும் கடவுளின் சித்தத்தில் இருந்தது. இந்த அன்பும், ஒருவர் மற்றவர் மேல் அக்கறை காட்டுவதுமே விசுவாசிகளின் மத்தியில் இயேசு இருக்கிறார் என்பதற்கு தெளிவான அடையாளம்.
அற்புதங்களைத் தவிர வேறு ஒரு முக்கியமான அடையாளம், விசுவாசிகளின் ஒற்றுமை:
நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோவான் 17:20–21)
இயேசு பிதாவுடன் ஒன்றாக இருப்பது போல் விசுவாசிகளும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஜெபித்தார். ஒவ்வொருவரும் தன் ஆலோசனையையும் விருப்பத்தையும் விட்டு விட்டு இயேசுவுக்கு கீழ்ப்படியாவிட்டால் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு சாத்தியமில்லை. வேதத்தின் ஒரு சில விஷயங்களில் மட்டும் ஒரே மனமாய் இருப்பது ஒற்றுமை அல்ல. இயேசு ஜெபித்த ஒற்றுமை என்பது மிக ஆழமானது.
மேலோட்டமான ஒற்றுமையை உலகத்திலும் பார்க்கலாம். ஆனால் உண்மையான கிறிஸ்தவர்களின் ஆழமான ஒற்றுமை என்பது ஒரே மனமும், இருதயமும் கொண்டு வாழ்வதில் பார்க்க முடியும். (அப் 4:32). இந்த ஒற்றுமையை பெறுவதற்கு, கிறிஸ்தவர்கள் தங்கள் நேரத்தை மற்றவர்களுக்காக செலவிட்டு, ஒருவரையொருவர் ஆழமாக அறிந்து கொள்கிறார்கள். இதுவே இயேசுவைப் போல ஒருவரை ஒருவர் நேசிப்பது. இந்த மாதிரியான ஒற்றுமையை நடித்து காட்ட முடியாது. அதனால் தேவனுடைய கிரியைக்கு இது மாதிரியான ஒற்றுமை ஒரு தெளிவான அடையாளம்.
முடிவுரை
இயேசுவின் நாமத்தினாலே நிகழ்கிற அற்புத அடையாளங்களைக் கண்டு ஏமாறாமல் இருப்போம். கடவுள் கிரியை செய்கிறார் என்பதற்கான உண்மையான அடையாளங்களான கடவுளின் வார்த்தை, கீழ்ப்படிதல், பணிவு, பரிசுத்த வாழ்க்கை, சகோதர அன்பு, மற்றும் ஒற்றுமையை தேடுவோம்!
பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. (1 யோவான் 3:7–10)